Thursday, January 17, 2019

6.ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 2

இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் உணரும்போது அவர் முன்னால் இருந்த பூஜை பொருட்கள் சுவர் கதவு விளக்குகள் என்று அனைத்தும் அன்னைகாளியாக தெரிகின்றது. அவரால் அந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலாமல் தவிக்கின்றார். இப்படி ஒரு அனுபவம் நம்மை ஆட்கொண்டிருந்தால் அல்லது நமக்குள்ளே இறைவன் உறைகின்றான் என்பதைத் தவத்தின் மூலம் சுவானுபூதியில் உணர்ந்துவிடிருந்தாலோ ஒருவன் கோவிலுக்கு சென்று கும்பிடுவதை மறுபரிசீலனை செய்யலாம். இப்படிப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புறத்திலோ அகத்திலோ ஒரு கோவிலை நிர்மாணித்து அதில் இறைவனைப் பிரதிஷ்டை செய்து இந்த நிலையை அடைய முற்படுவது அவசியமாகின்றது.

 புறத்தில் கோவில் கட்டலாம் அகத்தில் எந்த செங்கல்லை வைத்துக்  கட்டுவது. அதனால் கோவிலுக்குச் சென்றுதான் இறைவழிபாடு செய்யவேண்டுமா என்பது யாருக்குத்தேவை யாருக்குத் தேவையில்லை என்பதில் நமக்குத் தெளிவுவேண்டும். ஆலயம் சென்று வழிபட  விருப்பம் இல்லாதவர்களுக்கும் உரிய வழிகளை நமது சித்தர்களும் முனிவர்களும் கூறிச் சென்றிருக்கின்றார்கள். 

                                 நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே 
                                 மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                                                                        (பராபரக்கண்ணி -151 தாயுமானவர்)

இங்கே தாயுமானவர் இறைவனிடம் இறைஞ்சுவதைப் பாருங்கள். ஐயா என்னால் மன்னர்களைப்போல பெரும் பொருள் செலவுசெய்து பெரிய கட்டிடங்களை எழுப்பி உன்னை வழிபாடு செய்யமுடியாது. நானோ ஒரு ஆண்டி எனக்கிருப்பது இந்த உடல் மட்டுமே. அதையும் என்றோ உனக்கே அற்பணித்துவிட்டேன். அதனால் இப்பொழுது எனக்கென்று சொந்தமான இடம் ஒன்று உண்டென்றால் அது எனது இதயமே அதனால் அங்கு வந்து நீ அமர்ந்துகொள்வாயாக. நீ வந்தால் உனக்கு எனது பரிசுத்தமான எண்ணங்களால் தூப தீபங்கள் காட்டி எனது பவித்திரமான அன்பினால் உன்னை மஞ்சள்நீராட்டி பூசை செய்து வழிபடுகின்றேன். அந்தப் பூசையை ஏற்றுக்கொள்ள வரவேண்டும் என்று வருந்தி அழைக்கின்றார்.  

                                                 உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்
                                                 வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
                                                 தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
                                                 கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே  
                                                                                                      --திருமுலர் திருமந்திரம்

இங்கே திருமூலர்ஐயா கூருவதைப் பாருங்கள். எனது எண்சாண் உடம்பே நீ வாழுகின்ற ஆலயம். அதில் எண்ணங்கள் பொங்கிவழிகின்ற எனது உள்ளமெனும் இதயமே எனது உடம்பாகிய ஆலயத்தில் நீ வாழுகின்ற சன்னதி என்கின்றார். சரி அதெல்லாம் எனக்குள்ளே இருக்கின்றது நீ எப்படி வந்து செல்வாய். அதனால் எனது வாயே நீ வந்து செல்கின்ற கோபுரவாசல். புறத்தில் உள்ளகோவிலில் லிங்கத்தை வைத்து வழிபடுகின்றனர் நான் எங்குச் செல்வேன். எனது ஜீவனை இங்கு நீ அமரும் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து எனது ஐந்து புலன்களையும் உனது சன்னதிக்கு விளக்காக அமைத்து வைக்கின்றேன் வந்து பூசைகொள் என்று இறைவனை இறைஞ்சுகின்றார்.  ஆகையினால் ஒருவன் தனது ஆண்மீகப் பயணத்தை புறத்தில் உள்ள ஆலயத்தில் துவக்கினாலும் அந்தத் தொடர்பினால் உண்டான ஞானம் ஒரு சமயம் அவனை உண்மையான் ஆலயத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றது.

கோவில் அமைப்பு என்பது நமது சரீரத்தத்துவமே இந்தச் சரீர தத்துவங்களை வென்று விடுதலை அடைந்து சென்றவர்கள் பலர் அந்தந்த கோவிலின் கருவறையில் சுவாமியாக வீற்றிருக்கின்றார்கள். கோவிலின் சில அடிப்படை அமைப்புகளைப் பார்ப்போம் பாதம்-ராஜகோபுரம், பீஜம்&யோனி – கொடிக்கம்பம்&பலிபீடம், நெஞ்சு – நந்தி , சிரசு-கர்ப்பக்கிருகம்(லிங்கம்). இப்படி நமது சரீரத்தின் ஆழமான உண்மைத் தத்துவமே புறத்தில் கோவில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படித் தன்னுடைய சரீரத்தையே புனிதப்படுத்தி ஆலயமாக உருவாக்கி வைத்துக்கொண்டவர்களுக்குக் கோவிலுக்கு செல்லவேண்டிய நிர்பந்தங்கள் இல்லை. அப்படிஎனின் எப்பொழுது சரீரம் ஆலயமாக ஆகும்?. எல்லா உடலும் ஆலயமாவதற்கு தகுதியுடையதுதான் நோய்நொடிகளை நீக்கிச் சதாசர்வகாலமும் இறைத்தியானத்திலேயே இருக்கின்ற ஒருவனுடைய உடல் இயல்பாகவே ஆலயம் ஆகின்றது. அந்த இடத்தை இறைவன் தானே தேடிவருகின்றான் அங்கே குடிகொள்கின்றான்.
தொடரும் .............

1 comment:

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

7.ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 3

இப்படி மனிதனிடத்தில் தான் குடியிருக்க இடம் வேண்டுமென்று இறைவன் மிகவும் பேராசை கொண்டான். அதனால்  அவன் மனிதனைப் படைக்கும் போது மனிதன...