Friday, January 18, 2019

7.ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 3




இப்படி மனிதனிடத்தில் தான் குடியிருக்க இடம் வேண்டுமென்று இறைவன் மிகவும் பேராசை கொண்டான். அதனால்  அவன் மனிதனைப் படைக்கும் போது மனிதன் அதற்கு இடம் தருவானா என்று சந்தேகம் வந்தது எனவே திட்டமிட்டு இதயத்தை நான்கு அறைகள் கொண்டதாக படைத்தான். எப்படியும் மனிதன் தன் மனைவிக்கு ஒரு அறையையும் தன் குழந்தைகளுக்கு ஒரு அறையையும் சுற்றத்தார்களுக்கு நண்பர்களுக்கு ஒரு அறையும் கொடுத்து விடுவான் மிச்சமிருக்கின்ற ஒரு அறையை நிச்சயமாக தனக்கு கொடுப்பான் என்று நப்பாசை கொண்டான் ஆனால் அது நடக்கவில்லை. அந்த நான்காவது அறையிலும் காமம் பணம் புகழ் பொருள் மற்றும் இதர குப்பைகளை போட்டு நிரப்பி இறைவனின் ஆசையை நிரசையாக்கிவிட்டான் மனிதன். அதனால் பரவாயில்லை எங்காவது கோவிலை கட்டினாய் என்றால்அங்கு வந்திருந்து உனக்குச் செய்யவேண்டியதை செய்கின்றேன் என்று இறைவன் தனக்கு சமாதானம் செய்துகொண்டான்.

இப்படித் தன்னிடத்தில் இடங்கொடுக்காமல் இறைவனைத் துரத்திவிட்ட மனிதர்கள் தன்னில் இறைவனைக் காணும் ஆவல் மற்றும் முயற்சி இல்லாததாலும் அது மிகவும் கடினமான தியாகங்கள் நிறைந்த ஒரு முள்நிறைந்தப் பாதை என்பதாலும் அதற்கு மாற்றுவழியாக ஆறுதலாகக் கோவில் குளங்கள் என்று அலைந்து இறைவனின் அருளைப் பெற முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

மனிதன் ஒன்றும் சாமானியமானவன் அல்ல அவன் தெரியாமல் ஒன்றும் இறைவனை ஓடிப்போ என்று தன்னில் இடம் கொடுக்காமல் துரத்திவிட்டு விட்டு கோவிலுக்கு அலைந்துகொண்டிருக்கவில்லை. தன்னிடத்தில் இருக்க இடம் கொடுத்தால் அந்த இறைவன் என்ன செய்வான் என்று அவனுக்குத் தெரியும் அதனால்தான் அவன் இறைவன் இருக்க இடம் இல்லாதவாறு தன் இதயத்தில் அனைத்துக் குப்பைகூளங்களையும் போட்டு அரங்கம் நிறைந்தது (housefull board) என்று எழுதிவைத்து இனி இங்கு உனக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டு உள்ளக் கதவை மூடிவிடுகின்றான். ஏன் இப்படி மனிதன் பயப்படுகின்றான் என்றால் இறைவன் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பான். அவனுக்கு ஒரு அறையைக் கொடுத்தால் கூடபோதும் வந்து உட்கார்ந்துகொண்டு அவன் போடுகின்ற சட்டதிட்டங்களும் கொடுக்கின்ற தொல்லைகளும் தாங்கமுடியாது. அப்படி அவனுக்கு ஒரு சிறு இடம் கொடுத்தாலும்கூடப் போதும் அவன் மற்ற அறைகளில் உள்ளவர்களை அங்கிருந்து விரட்டியடித்துத் தானே அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்சி செய்ய ஆரம்பித்து விடுவான்.

எறும்புப்புற்றில் பாம்பு நுழைந்துவிட்டால் அதன்பின்னர் அங்கு எறும்புகள் வாழமுடியாது. இப்படி இடம் கொடுத்து ஏமாந்தவர்கள்  தெருவில் பரதேசிகளாக திரிவதை பார்த்து பார்த்துத்தான் மனிதன் பயம்கொண்டு இறைவனை தன்னிடத்தில் சிறிதளவுகூட ஒண்டவிடுவதில்லை. மனிதனுக்குத் தெரியும் யார் இந்த அவஸ்தைகளெல்லாம் படுவது அதற்குப்பதில் எல்லா அறைகளிலும் எதாவது போட்டு நிரப்பிவிட்டால் அவர்கள் நமக்குத் துணையாகவும் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்று நினைக்கின்றான். இறைவனுக்கு இடம் கொடுத்தால் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு நம்மைத் தெருவில் நிறுத்திவிடுவான் என்று பயம்.

அதனால் மனிதன் இறைவனுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டான். இறைவா மிகவும் பேராசைபடாதே என்னிடத்தில் இடமில்லை உனக்கு ஆனால் கவலைப்படாதே உனக்கு வேறு ஒரு இடம் ஏற்பாடு செய்கின்றேன் என்று கோவிலை கட்டிவைக்கின்றான். இப்படி நம் அனைவராலும் ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்ட இறைவன் வேறு வழிதெரியாமல் எங்கோ ஆலமரத்தடியிலோ அரசமரத்தடியிலோ உட்கார்ந்துகொண்டு வெயில் மழையென்று பாராமல் புலம்பிக் கொண்டிருக்கின்றான்.

என்றாவது மனிதன் தன்னைத் தேடி வருவான் என்று ஏங்கிக் காத்திருக்கின்றான். அப்படிக் காத்திருக்கும்பொழுது இறைவனுக்கு ஒரு எண்ணம் தோன்றுகின்றது மனிதனுக்கு எதைச்செய்தால் தன்னை நாடிவருவான் என்று முதலில் இன்பங்களையும் வசதி வாய்ப்புகளையும் கொடுக்கின்றான் அவை அனைத்தையும் வாங்கிக்கொண்ட மனிதன் அதுஅனைத்தும் தன் புண்ணியத்தாலும், நல்லெண்ணங்களாலும், தனத்துக்கடுமையான உழைப்பினாலும் தனக்குக் கிடைத்த வெகுமதி என்று இறுமாந்து மேலும் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பிக்கின்றான். அகங்காரம் அவன் கண்ணை மறைப்பதால் ஒருசமயம் அவன் ஆட்டம் தவறி விழுந்து தனக்குத்தானே துன்பத்தை ஏற்படுத்திக்கொள்கின்றான். உடனே அவன் இறைவனைநோக்கி இறைவா உலகத்திலேயே எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் இந்தச் சோதனை என்னை ஏன் கைவிட்டுவிட்டாய் என்று கதறுகின்றான்”.

இறைவனுக்கு மனிதன் தன்னை நினைக்க ஆரம்பித்துவிட்டான் என்று ஒருவகையில் சந்தோசம். ஆனாலும் சரி எதனால் தன்னை நினைத்தான் துன்பம் வரும்போது தானே, அப்போது அவனுக்குத் துன்பமே நிறைந்திருந்தால்தானே தன்னை நினைப்பான் இதைசீக்கிரம் சரிசெய்துவிட்டால் அவன் மறுபடியும் தனது பழைய வாழ்க்கையைத் தொடருவான் தன்னக்க் கண்டுகொள்ள மாட்டான் என்று கேட்டும் கேட்காமலும் இருந்துகொள்கின்றான். ஒரு சமயம் மனிதனின் மனம் தன்தவற்றை நினைத்தும் இறைவனை நினைத்தும் வருந்தும்போது இந்தத் துயரங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை இறைவன் அவனுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றான். இதைபுரிந்துகொண்ட சிலர் தனக்கு இன்பம் வரும்போது இறைவனை நினைக்க அரம்பித்துவிடுவதால் அவர்களுக்கு மேலும் இன்பங்களையும் தனது பாதுகாப்பையும் கொடுக்கின்றான்.
சரி இப்போது நடைமுறை வாழ்க்கைக்கு வருவோம். ஒருவன் இறைவனை ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதற்கும் வீட்டில் இருந்து வழிபடுவதற்கும் என்ன வித்தியாசம். மாட்டின் உடம்பெல்லாம் ரத்தம் இருக்கின்றது அந்த ரத்தமே பாலாக மாறுகின்றது. ஒருவன் பாலை பெறவேண்டுமென்றால் மாட்டின் கொம்பைப் பிடித்து இழுத்தால் வராது மடியைப் பிடித்து இழுத்தால் தான் வரும். ஆலயம் என்பது இறைவனின் அருள் என்கின்ற பாலை தருகின்ற மடி போன்றது. பால் வேண்டுமென்பவர்கள் அங்குச் சென்று பாலைக் கரந்துகொள்ள வேண்டியதுதான் ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே பூஜை அறையை வைத்து வணங்கிக்கொள்வதுவும் ஆலயத்தைக் கடக்கும்போது மனத்தால் கோபுரத்தை பார்த்து வணங்கிக்கொள்வதுவும் புண்ணியம் தருகின்ற செயலே.
     
 கோபுரத்தரிசனம் பாபவிமோசனம்.

இங்கே கோபுரத்தரிசனம் என்கிற தத்துவம் வேறு. இதைகோவில்களில் உள்ள கோபுரத்தை பார்த்த உடன் பாபவிமோசனம் அடைகின்றோம் என்று தவறாக அர்த்தம் கொண்டுவிடக்கூடாது. இறைவன் வாழும் இடத்தைத் தரிசனம் செய்தால் ஒருவனுக்கு பாபவிமோசனம் கிடைக்கின்றது என்பதே இதன் உண்மைப்பொருள்.

ஆலயம் என்பது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்லாது யோகிகளும் ஞானிகளும் சித்தர்களும் சங்கமிக்கும் ஒரு ஆற்றல் மையமாகவும் விளங்குகின்றது. மற்றொரு பக்கம் ஒருவனது முன்வினை கர்மாக்களை களைவதற்கு உதவும் இடமாகவும் விளங்குகின்றது. இப்படித் தன்னில் இறைவனைக் தரிசித்த சித்தர்களும் தவசிகளும் முனிவர்களும் வருகைதந்து அவர்களது பாதம்பட்ட ஆலயங்களை ஒருவன் சென்று வலம் வரும்போது அவர்களது பாதங்களில் இருந்து ஆலயங்களில் பதிந்த அருட்சக்தி ஆலய வழிபாடு செய்பவர்களுக்குள் பாய்ந்து அவர்களையும் நல்வழிப்படுத்தி இறைவனை நோக்கித் திருப்புகின்றது. தேவாரம் பாடிய நால்வரும் இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு கோவிலாக சென்று பாடி அந்தத் தலத்தின் மகிமையை மக்கள் உணரும்படி செய்திருக்கின்றார்கள்.

இப்படி கோவிலுக்கு சென்று வருவதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் ஆயிரம் இருந்தாலும் கோவிலுக்கு சென்றுவருவதாலேயே நமக்கு முக்தி கிட்டிவிடும் என்று நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் முக்திக்கானவழி கோவிலில் நாம் செய்யும் வழிபாட்டோடு நின்றுவிடுவதில்லை. மாறாக அது அங்கே துவங்குகின்றது என்றுமட்டுமே சொல்லலாம். அதனால் கோவிலுக்கு சென்று வருவது ஒருபுண்ணிய காரியம் மற்றும் நமது இயம நியம பழக்க வழக்கங்களை நெறிப்படுத்தி இறைவனை நோக்கித் திருப்பும் ஒரு முயற்சியேயாகும். இறைவனுடன் நட்புத்தொடர்பு ஏற்படுத்திக்கொள்கின்ற முயற்சிக்காக ஒருவன் கோவிலுக்கு செல்வதுவும், தனக்கு வேண்டியதை கேட்பதற்காக மட்டும் கோவிலுக்கு செல்வது என்பதுவும் வேறுவேறு. அதனால் அவை தருகின்ற பலன்களும் வேறுவேறாகத்தான் இருக்கும். அப்படி எந்த ஒரு உயர்ந்த அனுபவத்தைப் பெற ஒருவன் இவ்வளவு தியாகங்களும் சிரமங்களும் அடைந்து இறைவனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முனைகின்றான் என்று பார்ப்போம்  

Thursday, January 17, 2019

6.ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 2

இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதை ராமகிருஷ்ண பரமஹம்சர் உணரும்போது அவர் முன்னால் இருந்த பூஜை பொருட்கள் சுவர் கதவு விளக்குகள் என்று அனைத்தும் அன்னைகாளியாக தெரிகின்றது. அவரால் அந்த நிலையில் இருந்து மீண்டு வர இயலாமல் தவிக்கின்றார். இப்படி ஒரு அனுபவம் நம்மை ஆட்கொண்டிருந்தால் அல்லது நமக்குள்ளே இறைவன் உறைகின்றான் என்பதைத் தவத்தின் மூலம் சுவானுபூதியில் உணர்ந்துவிடிருந்தாலோ ஒருவன் கோவிலுக்கு சென்று கும்பிடுவதை மறுபரிசீலனை செய்யலாம். இப்படிப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் புறத்திலோ அகத்திலோ ஒரு கோவிலை நிர்மாணித்து அதில் இறைவனைப் பிரதிஷ்டை செய்து இந்த நிலையை அடைய முற்படுவது அவசியமாகின்றது.

 புறத்தில் கோவில் கட்டலாம் அகத்தில் எந்த செங்கல்லை வைத்துக்  கட்டுவது. அதனால் கோவிலுக்குச் சென்றுதான் இறைவழிபாடு செய்யவேண்டுமா என்பது யாருக்குத்தேவை யாருக்குத் தேவையில்லை என்பதில் நமக்குத் தெளிவுவேண்டும். ஆலயம் சென்று வழிபட  விருப்பம் இல்லாதவர்களுக்கும் உரிய வழிகளை நமது சித்தர்களும் முனிவர்களும் கூறிச் சென்றிருக்கின்றார்கள். 

                                 நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே 
                                 மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே
                                                                        (பராபரக்கண்ணி -151 தாயுமானவர்)

இங்கே தாயுமானவர் இறைவனிடம் இறைஞ்சுவதைப் பாருங்கள். ஐயா என்னால் மன்னர்களைப்போல பெரும் பொருள் செலவுசெய்து பெரிய கட்டிடங்களை எழுப்பி உன்னை வழிபாடு செய்யமுடியாது. நானோ ஒரு ஆண்டி எனக்கிருப்பது இந்த உடல் மட்டுமே. அதையும் என்றோ உனக்கே அற்பணித்துவிட்டேன். அதனால் இப்பொழுது எனக்கென்று சொந்தமான இடம் ஒன்று உண்டென்றால் அது எனது இதயமே அதனால் அங்கு வந்து நீ அமர்ந்துகொள்வாயாக. நீ வந்தால் உனக்கு எனது பரிசுத்தமான எண்ணங்களால் தூப தீபங்கள் காட்டி எனது பவித்திரமான அன்பினால் உன்னை மஞ்சள்நீராட்டி பூசை செய்து வழிபடுகின்றேன். அந்தப் பூசையை ஏற்றுக்கொள்ள வரவேண்டும் என்று வருந்தி அழைக்கின்றார்.  

                                                 உள்ளம் பெருங்கோவில் ஊன்உடம்பு ஆலயம்
                                                 வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
                                                 தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்
                                                 கள்ளப் புலன் ஐந்தும் காளாமணிவிளக்கே  
                                                                                                      --திருமுலர் திருமந்திரம்

இங்கே திருமூலர்ஐயா கூருவதைப் பாருங்கள். எனது எண்சாண் உடம்பே நீ வாழுகின்ற ஆலயம். அதில் எண்ணங்கள் பொங்கிவழிகின்ற எனது உள்ளமெனும் இதயமே எனது உடம்பாகிய ஆலயத்தில் நீ வாழுகின்ற சன்னதி என்கின்றார். சரி அதெல்லாம் எனக்குள்ளே இருக்கின்றது நீ எப்படி வந்து செல்வாய். அதனால் எனது வாயே நீ வந்து செல்கின்ற கோபுரவாசல். புறத்தில் உள்ளகோவிலில் லிங்கத்தை வைத்து வழிபடுகின்றனர் நான் எங்குச் செல்வேன். எனது ஜீவனை இங்கு நீ அமரும் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து எனது ஐந்து புலன்களையும் உனது சன்னதிக்கு விளக்காக அமைத்து வைக்கின்றேன் வந்து பூசைகொள் என்று இறைவனை இறைஞ்சுகின்றார்.  ஆகையினால் ஒருவன் தனது ஆண்மீகப் பயணத்தை புறத்தில் உள்ள ஆலயத்தில் துவக்கினாலும் அந்தத் தொடர்பினால் உண்டான ஞானம் ஒரு சமயம் அவனை உண்மையான் ஆலயத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றது.

கோவில் அமைப்பு என்பது நமது சரீரத்தத்துவமே இந்தச் சரீர தத்துவங்களை வென்று விடுதலை அடைந்து சென்றவர்கள் பலர் அந்தந்த கோவிலின் கருவறையில் சுவாமியாக வீற்றிருக்கின்றார்கள். கோவிலின் சில அடிப்படை அமைப்புகளைப் பார்ப்போம் பாதம்-ராஜகோபுரம், பீஜம்&யோனி – கொடிக்கம்பம்&பலிபீடம், நெஞ்சு – நந்தி , சிரசு-கர்ப்பக்கிருகம்(லிங்கம்). இப்படி நமது சரீரத்தின் ஆழமான உண்மைத் தத்துவமே புறத்தில் கோவில் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படித் தன்னுடைய சரீரத்தையே புனிதப்படுத்தி ஆலயமாக உருவாக்கி வைத்துக்கொண்டவர்களுக்குக் கோவிலுக்கு செல்லவேண்டிய நிர்பந்தங்கள் இல்லை. அப்படிஎனின் எப்பொழுது சரீரம் ஆலயமாக ஆகும்?. எல்லா உடலும் ஆலயமாவதற்கு தகுதியுடையதுதான் நோய்நொடிகளை நீக்கிச் சதாசர்வகாலமும் இறைத்தியானத்திலேயே இருக்கின்ற ஒருவனுடைய உடல் இயல்பாகவே ஆலயம் ஆகின்றது. அந்த இடத்தை இறைவன் தானே தேடிவருகின்றான் அங்கே குடிகொள்கின்றான்.
தொடரும் .............

Wednesday, January 16, 2019

5. ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 1



     
        ஆலயம் அல்லது கோவில் என்பது இறைவன் வாழும் வீடு. அதாவது கோ-இல் கோ-அரசன் இல்-இல்லம் என்று அழைக்கப்பட்டது அல்லது ஆலயம் ஆ-பசு(ஜீவன்/மனம்) லயம்-ஒருமுகப்படும் இடம் என்றும் அழைக்கப்படுகின்றது. இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பது அனைவரும் அறிந்த விசயம்தான். அப்படி எங்கும் இருக்கின்ற இறைவனுக்கு எதற்குக் கோவில் தேவைப்படுகின்றது.

உதாரணத்திற்காக நாம் ஒரு நாட்டில் ஒரு சிறு ஓலைக்குடிசை வீட்டில் வாழ்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நமது அழைப்பின்பேரின் அந்த நாட்டின் மன்னவனை நாம் அழைத்து அவன் நமது வீட்டிற்கு வந்தால் எப்படித் தங்கவைக்க முடியும். அதனால் அவனை வரவேற்று உபசரிக்க பொதுவான ஒரு இடம் தேவைப்படுகின்றது அவனது படைகள் இருக்கத் தனி இடமும் தேவைப்படுகின்றது. ஒரு நாட்டின் மன்னவனுக்கே இப்படியென்றால் இந்தப் பிரபஞ்சத்திற்கே மன்னவனுக்கு எப்படிப்பட்ட ஒரு இடமும் அமைப்பும் தேவைப்படும் அதை நம்மால் வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா.

இப்படி நமது அன்பிற்காகக் கட்டுப்பட்டு வந்து நிற்கும் மன்னவன்/இறைவன் வாழும் இடம் கோவில்/ஆலயம் எனப்பட்டது. அனைத்துச் ஜீவன்களுக்கும் அரசனான அந்த இறைவனைச் சென்று வழிபட்டு தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஒரு உபாயமாகவே புறத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இயற்கையாகவே இப்படி பூமியில் இறைவனின் அருள்பெருகி வழியக்கூடிய இடங்களைச் சித்தர்களும் முனிவர்களும் தமது ஞான திருஷ்டியால் தெரிந்து அன்றைய மன்னர்களின் துணைக்கொண்டு அங்கு ஆலயங்களை எழுப்பி இறைவனின் அருளொளியை மக்கள் அங்குச் சென்று தம்முள்பெருக்கி வாழ்வில் நலம்பெறுவதற்கு துணைச்செய்திருக் கின்றார்கள். அதனால் ஆலயங்கள் என்பதை ஒரு சக்திப்பெட்டகம் என்றால் மிகையாகாது.

இயற்கையாக எங்கும் இருக்கின்ற இறைவனை வாழ்த்தி வரவேற்று ஒரு இடத்தில் இருத்தி அவனுக்குச் சோடச உபசாரங்களைச் செய்து தங்கள் பிரார்த்தனைகளை முன்வைத்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு இறைவனுக்கு ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் வழியாக ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. சூரியஒளி எங்கும் இருந்தாலும் அது நம்மீது பட்டால் பெரிதாக நமக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை அதேசமயம் அதை ஒரு லென்சின்(குவியாடி)வழியாகச் செலுத்தி ஒரு இடத்தில் ஒருமுகப்படுத்தினால் அது சுட்டுப் பொசுக்கக்கூடிய மிகச்சக்திவாய்ந்த ஒளியாக மாறுவது போல. இறைச்சக்தியை ஈர்த்து ஓரிடத்தில் ஒருமுகப்படுத்திச் சேமித்து வைத்து அங்கு வருபவர்களுக்கு அதை விநியோகிக்கும் மையங்களாக ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

உண்மையில் ஆலயங்கள் இறைவனுக்குத் தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. அதனால்தான் அன்னியப் படையெடுப்பின்போது பல ஆலயங்கள் அழிக்கப்பட்டபோதுகூட எந்தத் தெய்வமும் வாளெடுத்துச்சென்று போர்புரிந்து அதைத் தடுக்க முனையவில்லை. மாறாக மனிதர்கள் சென்று போர்புரிந்து தடுக்க முனைந்தார்கள் அல்லது அழிந்த ஒன்றைப் பின்னர் தமக்காகப் புனருத்தாரணம் செய்துகொண்டார்கள்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்று ஒளவையார் கூறுகின்றார். இதன் பொருளென்ன? அப்படி கோவில் இல்லாத ஊரில் இருக்குமொரு மனிதன் வாழவே முடியாமல் பயனற்றுப் போய்விடுவானாயென்ன. மனிதனுக்கு ஏற்படும் பிறப்பு அவன் தன் கர்மங்களைக் கழித்து தன்னை ஒரு உயர்ந்த ஆன்மாவாக மாற்றிக்கொள்வதற்காகவே ஏற்படுகின்றது. அப்படி ஒரு வாழ்க்கையைத் தானேதேடிவந்து பிறக்கும் மனிதனுக்கு அவனது நோக்கத்தினை யடைய உதவும் ஒரு உபாயமாகவே ஆலயங்கள் திகழ்கின்றன. அதனாலேயே ஒளவையார் அவர்கள் இப்படிக் கூறுகின்றார். ஒரு மனிதன் உயர்வதற்குத் தேவையான பல விசயங்களைக் கோவில்கள் செய்துதருகின்றது.

மக்களின் ஆன்மீகத் தேவைகளை மட்டுமல்லாது மக்களின் பொருளாதாரத் தேவைகள், மற்றும் பலலௌகீகத் தேவைகளையும்கூடப் பூர்த்தி செய்து வைக்கும் இடங்களாக அன்றைய அரசர்கள் ஆலயங்களை வடிவமைத்து அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி அதை நிர்வகித்து வந்திருக்கின்றனர் என்பதற்கு தஞ்சைப்பெருவுடையார் ஆலயம் ஒரு மிகப்பெரிய சான்றாகத் திகழ்கின்றது. அதுமட்டுமல்லாது கற்றுத்தெளிந்தோர்களும் கல்லாதவர்களும் சங்கமித்து ஒருவருக்கொருவர் தமது வாத விவாதங்களைப் பெருக்கி அறிவுப் பரிமாற்றம் செய்து ஆன்ம உயர்வுக்கு வித்திடுகின்ற அறிவுமையங்களாகவே இன்றளவும் ஆலயங்கள் திகழ்ந்து வருகின்றன.
இறைவனுக்குக் கோவில் கட்டச்சொல்லும் அதே ஆன்மீக தத்துவம் தான் இறைவன் எங்கும் இருக்கின்றான் என்றும் கூறுகின்றது அப்படி இருக்க அப்படிப்பட்டவனை நாம் ஏன் கோவிலுக்கு சென்று அங்கே கூறப்படுகின்ற சாஸ்திர சம்ப்ரதாயங்களை கடைப்பிடித்துத்தான் வணங்கவேண்டுமா?. நாம் நினைத்தால் வீட்டில் இருந்துகொண்டே அவனை நினைத்துக் கும்பிடுவதால் நமக்குப் பலன் கிடைக்குமா கிடைக்காதா? என்கின்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் சாதாரணமாக எழக்கூடியவையே. இறைவன் எங்கேயும் இருக்கின்றான் என்பது உண்மை. ஆனால் அதை நாம் எப்படி உணர்ந்திருக்கின்றோம் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். என்றோ எப்போதோ யாரோ சொற்பொழிவில் சொன்ன வார்த்தை மனத்தைத் தைத்தது உடனே மனம் அதை உணர்ந்து அடைந்து விட்டதுபோல நினைத்துக்கொண்டது. இது உண்மை அனுபவம் அல்ல நமது புத்திக்கு ஒரு புதிய தகவல் வந்து சேர்ந்திருப்பதன் அடையாளம். இதன்மூலம் இறைவன் எங்கும் இருக்கின்றான் என்பதை நம் அறிவு ஏற்றுக்கொண்டுவிட்டது அவ்வளவே அதனை அனுபவமாக நினைத்து நாம் நம்மை ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. பல சமயங்களில் இப்படி நாம் நமது அறிவினால் தெரிந்துகொள்கின்ற விசயங்களை அனுபவஞானமாக கற்பிதம் செய்து கொள்கின்றோம்.

பெரும்பாலும் நாம் சுயமாக சிந்திப்பதைவிடப் பிறரின் கருத்துக்களையே வங்கி அதைத் தாங்குகின்ற பாத்திரமாகவும் அதைப் பரப்புகின்ற ஊடகம் போலவும் செயல்படுகின்றோம். இதனால் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்றும் இன்னும் என்ன செய்தால் நாம் முன்னேறமுடியும் என்றும் அறிந்துகொள்ள முடிவதில்லை. ஏனென்றால் நாம் நமக்குக் கிடைத்த அறிவு அனுபவமாக ஆகிவிட்டதா என்று ஆராய்ந்து தெளியவில்லை, அதனால் மனம் புரிந்துகொண்டதையே நாம் அனுபவமாகக் கற்பிதம் செய்துகொள்கின்றோம். இது எப்படி என்றால் அமெரிக்கா சென்றுவந்ததை பற்றி தினமும் படித்தும் கேட்டுக்கொண்டும் பலவருடம் கழித்த ஒருவன் ஒருசமயம் தான் அங்குச் சென்று வந்ததைப்போலவே பேசவும் நடக்கவும் அரம்பித்துவிடுவதைப்போல ஆகும்.

சுய அனுபவம் இல்லாத இவனுடைய இந்த நடவடிக்கை ஒருவேளை முதல்முறை அமெரிக்கா செல்பவர்களுக்கு பயன்படுமென்று அவனைப் பலரும் வந்து கலந்துபேசி தகவல்களைச் சேகரித்துச் செல்வதற்கு உதவுமே ஒழிய அவனுக்கு எந்த வகையிலும் பயன்படாது. இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு அனைத்து ஆன்மீக விசயங்களும் ரகசியங்களும் வெளிப்படையாக எளிதில் கிடைக்கப்பெறுகின்றது அதனால் மக்கள் தாம் படித்தது அனைத்தையும் தான் அனுபவத்தில் உணர்ந்ததாக நினைத்துக்கொண்டு அந்த அனுபவத்தைப் பெறுவதற்கான உழைப்பைச் செய்யாமல் விட்டுவிடுகின்றார்கள். ஒரு விஷயம் நல்லது என்று தெரிந்ததும் உடனே அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லிவிட்டு தாம் அதைக் கடைப்பிடிக்கும் அக்கறை ஏதும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
                                           தொடரும் ......

Copyright ©2019 Writer Ravikumar

Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author.
©2019 எழுத்தாளர் ரவிக்குமார். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.

7.ஆலயம் தொழுதல் சாலவும் நன்று பகுதி 3

இப்படி மனிதனிடத்தில் தான் குடியிருக்க இடம் வேண்டுமென்று இறைவன் மிகவும் பேராசை கொண்டான். அதனால்  அவன் மனிதனைப் படைக்கும் போது மனிதன...